ஐந்தாம் மாதம்

குழந்தையின் வளர்ச்சி: 

கைவிரலை சூப்பியது போதாது என்று குழந்தை கால் விரல்களையும் சூப்ப ஆரம்பிக்கும். குழந்தைக்கு விக்கல் ஏற்படலாம். முடி, கண் இமை, புருவம் வளர ஆரம்பிக்கும். 

குழந்தையின் இதயத் துடிப்பை சாதாரண 'ஸ்டெதஸ்கோப்' மூலமாகவே கேட்க முடியும். குழந்தையின் எலும்புகள் வலுவடையத் தொடங்கும்.

எலும்பு மஜ்ஜைகள் உருவாக ஆரம்பிக்கும். இந்த எலும்பு மஜ்ஜையே, ரத்தச் சிவப்பு அணுக்களை உற்பத்தி செய்யும் அளவுக்கு வளர்ச்சி அடையும். 

சிறுநீரகம் முன்பைக்காட்டிலும் அதிக ஆற்றலுடன் செயல்படும். குழந்தை, 
8 முதல் 12 இன்ச் வளர்ந்திருக்கும். எடை கிட்டத்தட்ட அரை கிலோ இருக்கும்..

கர்ப்பிணியின் உடலில் ஏற்படக்கூடிய மாற்றங்கள்: 

இது கர்ப்பக் காலத்தின் மையப் பகுதி. இதுவரை இருந்த குமட்டல், வாந்தி போன்றவை இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும். 

இருப்பினும், சாப்பிட்டதும் நெஞ்சு எரிச்சல், செரிமானக் குறைபாடு போன்றவை மட்டும் நீடிக்கும். மலச்சிக்கல் மற்றும் இடுப்பு வலி ஏற்படலாம். இடுப்பு எலும்புப் பகுதி தளர்வு பெறுவதால், இந்த வலி வழக்கமான ஒன்றுதான். 

வலி அதிகமாகவோ அன்றாட வாழ்க்கையைப் பாதிப்பதாகவோ இருந்தால், டாக்டரின் ஆலோசனையைப் பெற வேண்டும்.

குழந்தைக்குப் பாலூட்டுவதற்காக, பால் சுரப்பிகளில் மாற்றங்கள் ஏற்படும். சிலருக்கு இந்த நேரத்தில் மார்பகத்தில் ஒருவகையான திரவம் சுரக்கலாம். இது, எதிர்காலத்தில் குழந்தைக்குத் தாய்ப்பால் புகட்டுவதில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது. கவலை வேண்டாம்.

செய்யவேண்டியவை:

குழந்தையின் உள்ளுறுப்புகளில் குறைபாடு ஏதேனும் உள்ளதா என்பதைக் கண்டறிய, தலைமுதல் பாதம் வரை ஸ்கேன் செய்து பார்க்க வேண்டும். இது அனாமலி ஸ்கேன் (anomaly scan) என்று அழைக்கப்படும்.

தாயின் ரத்தத்தில் சர்க்கரை மற்றும் ஹீமோகுளோபின் அளவுகளைக் கண்டறிய, ரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனை செய்ய வேண்டும்.

செரிமானம் மற்றும் மலச்சிக்கல் பிரச்னை இருந்தாலும், உணவு உட்கொள்வதைக் குறைத்துக்கொள்ளக் கூடாது. நார்ச் சத்துள்ள காய்கறிகள், பழங்களை அதிகம் எடுத்துக்கொள்வதன் மூலம் மலச்சிக்கலைத் தவிர்க்கலாம். தொடர்ந்து உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

RECENT POST

தேங்காய் நீரில் இத்தனை நன்மைகளா?

ஒரு கோப்பை தேங்காய் நீரில் இத்தனை நன்மைகளா?????? ✳ தேங்காய் நீரில் கலோரிகள் மிகக்குறைவு. இதனை அருந்துவதால் உடல் புத்துணர்ச்சி அட...