எலும்பின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் உணவு பொருள்கள் எவை தெரியுமா?
"தெருவில் நடந்துகொண்டிருந்தபோது தடுமாறி சாய்ஞ்சுட்டேன்... விழக்கூட இல்லை... சமாளிச்சுட்டேன்.. ஆனால் வலி தாங்க முடியலை... ஏதாவது தைலம் தடவினால் போதும்னு நினைச்சேன்... டாக்டர் எக்ஸ்ரே பார்த்திட்டு எலும்பு உடைஞ்சிருக்குன்னு சொல்றாரு. கீழே விழக்கூட இல்லையேன்னு கேட்டால், விழவேண்டாம்... ஆஸ்டியோபோரோசிஸ் இருந்தால் தும்மினால் கூட எலும்பு உடைந்து விடலாம்னு சொல்றாரு," என்று யாராவது கூறினால் நம்ப மறுக்கவேண்டாம்.
எலும்பு புரை பாதிப்பு இருந்தால் அது சாத்தியம்தான். நம் உடலை வடிவமைப்பதில் எலும்புகளுக்கு முக்கிய பங்கு உண்டு. நம் உடலின் தோற்றம், பாதுகாப்பு இவற்றுக்கு எலும்புகளே காரணம். மனித உடலில் மொத்தம் 206 எலும்புகள் உள்ளன. எலும்புகள் ஆரோக்கியமாக இருந்தால் நம்மால் நன்றாக நடமாட முடியும். தலை, கை, கால், கழுத்து, இடுப்பு, முதுகு தண்டுவடம், விரல்கள், பாதங்கள் என எல்லா இடங்களிலும் எலும்புகள் உள்ளன. இவை ஏதாவது ஒரு வழியில் அடிபட்டாலோ, நொறுங்கினாலோ, முறிந்தாலோ உடலின் இயக்கம் பாதிப்புறும். மூட்டுத் தேய்மானம், ஊட்டச்சத்து குறைபாடு, எலும்பு நீட்சி, ஜவ்வு வளர்தல் என பல பாதிப்புகளும் உருவாகின்றன.
எலும்புகள், இரத்த நிறமியான ஹீமோகுளோபினை உற்பத்தி செய்வதின் மூலம் இரத்த உற்பத்திக்கு உதவுகின்றன. ஆனால், அனைவருமே உறுதியான எலும்புகளோடு பிறப்பதில்லை என்பது ஒரு குறை. வைட்டமின் டி அல்லது கால்சியம் என்னும் சுண்ணாம்பு சத்து குறைந்தால் எலும்புகள் பலவீனமாக காணப்படும்; எலும்பு தொடர்புடைய உடல்நல கோளாறுகள் ஏற்படக்கூடும்.
உடலுக்குத் தேவையான அளவு கால்சியம் கிடைக்காதபோது செல்களின் இயக்கத்துக்காக எலும்பிலிருந்து கால்சியம் எடுத்துக்கொள்ளப்படும். இதன் விளைவாக கால்சியம் பற்றாக்குறை ஏற்படும். எலும்புகள் பலவீனமாகும். கால்சியம் குறைந்தால் கடுமையான மன அழுத்தம், தூக்கமின்மை, எரிச்சல் ஆகியவை உண்டாகும். சிலருக்கு எலும்பு பலவீனமாகி அரிப்பு ஏற்பட்டு ஆஸ்டியோபோரோசிஸ் (Osteoporosis) என்று கூறப்படும் எலும்பு புரை ஏற்படுகிறது.
எலும்பின் அடர்த்தி குறைதல், எலும்பு திசு இழப்பு ஆகியவை எலும்பை பலவீனமாக்கி, முறியும் அபாயத்தை உருவாக்குகிறது. சுண்ணாம்புச் சத்து (கால்சியம்) குறைவினால் எலும்பு வலுவிழக்கிறது. சரியான உணவுகளை சாப்பிடுவதால் எலும்பை மீண்டும் வலுவாக்கலாம்.
குழந்தைகளின் எலும்பு வளர்ச்சி சார்ந்த பிரச்னைகளை தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் மட்டுமே தடுக்க இயலும். தாய்ப்பாலில் கால்சியம் சத்து உள்ளது. குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கு இது உதவும். தாய்ப்பால் ஊட்டப்படாத குழந்தைகளின் எலும்பு வளர்ச்சி பாதிப்புறும். மார்பு கூடு உட்புறம் வளைந்தும், நெற்றி முன்புறம் தூக்கியும் கால் உட்பக்கமாக வளையவும் ஆரம்பிக்கும்.
சோயா பீன்ஸ் : 100 மில்லி கிராம் சோயா பீன்ஸில் 25 மில்லி கிராம் கால்சியம் உள்ளது. எலும்பு முறிவு ஏற்பட்டவர்கள் தினமும் காலையில் சோயா பால் அருந்தலாம்.
ஆரஞ்சு பழத்தில் சுண்ணாம்பு சத்து மட்டுமல்ல, வைட்டமின் 'டி'யும் அதிக அளவு உள்ளது. வைட்டமின் 'டி' சத்து, கால்சியம் நம் உடலில் சேர்வதற்கு உதவி செய்கிறது.
ராகி: தானியங்களில் கால்சியம் அதிகம் கொண்டது ராகி (கேழ்வரகு) ஆகும். 100 கிராம் ராகியில் 35 மில்லி கிராம் சுண்ணாம்பு சத்து உள்ளது. ஆகவே, ராகி கஞ்சி, ராகி தோசை, ராகி வெல்ல உருண்டை என்று விதம்விதமாக செய்து சாப்பிடலாம்.
அத்தி, உலராத சீமை அத்தி ஆகிய பழங்களில் கால்சியம் அதிக அளவு உள்ளது.
கொள்ளு:
எலும்பு உறுதியாக வேண்டும் என்று நினைப்பவர்கள் கொள்ளு சாப்பிடலாம். 70 வயதுக்கு மேற்பட்டவர்கள், சைவம் மட்டும் சாப்பிடுபவர்கள் கொள்ளு ரசம் வைத்து குடித்தால் எலும்பு வலிமை பெறும்.
இவை தவிர வாழை, கொய்யா ஆகிய பழங்களிலும் வெந்தய கீரை, வெந்தய தாள், காலிஃபிளவர், முருங்கை, கொத்தமல்லி, முள்ளங்கிக்கீரை, கேரட், வெண்டை, சர்க்கரைவள்ளிக்கிழங்கு ஆகியவற்றிலும் கால்சியம் அதிகம் காணப்படுகிறது.
100 கிராம் ஆப்பிள் சாப்பிட்டால் 10 மில்லி கிராம் கால்சியம் கிடைக்கும். அதுவே வெண்டைக்காயில் 90 மில்லி கிராம் கிடைக்கிறது. 100 கிராம் கீரைகளில் 60 மில்லி கிராம் கால்சியம் இருக்கிறது. நெத்திலி, வஞ்சிரம், கட்லா போன்ற மீன்கள் எலும்பு அடர்த்தி அதிகரிக்க உதவுகின்றன.
100 மில்லி கிராம் மீனில் 15 மில்லி கிராம் கால்சியம் உள்ளது.
ஆட்டுக்கால் சூப் குடித்தால் கால்சியம் கிடைக்கும்.