இயற்கை விவசாயம் - காலத்தின் கட்டாயம்
இயற்கை விவசாயம் இந்த மண்ணுக்கும், மனிதனுக்கும் மட்டுமல்லாமல் இந்த பூமியில்
வாழும் அனைத்து உயிரினங்களுக்கும் ஏற்ற
ஒரே இயற்கையான பாதுகாப்பு.
பல நூறு விதமான பயிரினங்கள் நம் நாட்டில் இருந்துள்ளன என்றும் அவை காலப்போக்கில் மறைந்து
காணாமல் போய்விட்டன என இயற்கை விஞ்ஞானி
நம்மாழ்வார் கூறியுள்ளார்.
சுமார் 166 பயிரினங்கள், 50,000 நெற்பயிர் இனங்கள்,
500 சோள ரகங்கள், 500 மிளகுப் பயிரினங்கள், 1000 மாமர வகைகள், என பல பயிரினங்களும், 20 வகை
வெள்ளாட்டு இனங்களும் 42 வகை செம்மறியாட்டு இனங்களும், 15 வகை எருமை இனங்களும், 30 வகை
கோழி இனங்களும், 18 வகை விலங்கினங்களும் சூழல் அமைப்புக்கு ஏற்ப மனித உதவியின்றியே பரிணமித்துள்ளன.
இத்தனை உயிர்களைப் படைத்து பரிணமிக்கச் செய்துள்ள
இயற்கை, மனிதனுக்கும் இப்பூமியில் வாழும் உரிமையைக்
கொடுத்துள்ளது. ஆனால், மனிதனோ தான் மட்டுமே
இப்பூமியில் வாழ பிறந்திருப்பதாக எண்ணிக்கொண்டதன் விளைவு
இன்று நம் பூமி பெரும் அபாயத்தை ச்
சந்தித்துக் கொண்டிருக்கிறது . நாம் மட்டுமல்ல பிற உயிர்களுக்கும் இங்கு வாழ உரிமையுண்டு.
இதை புரிந்துகொண்டு இயற்கையின் வழியில் வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் பூமித்தாய் நலம் காக்கலாம் மண்ணின் துயர் போக்கலாம்.
மொகஞ்சதாரோ, ஹரப்பா போன்ற இடங்களில்
எடுக்கப்பட்ட தடயங்கள் 5000 ஆண்டுகளுக்கு முன்பே
நமது முன்னோர் பயிர் சாகுபடி நுட்பம் குறித்து அறிந்து
இருந்ததைச் சொல்கிறது என்கிறார்கள். ஆனால், இன்று
நாம் அதிக மகசூல் ஈட்ட வேண்டும் என்ற நோக்கில் விளைநிலங்களை கொலைக்களங்களாக மாற்றி
வருகிறோம். விஞ்ஞான வளர்ச்சி என்ற பெயரிலே பூமித்தாயை நிலைகுலையச் செய்து வருகிறோம்.
நாம் விளைவித்த சுற்றுச்சூழல் சீர்கேட்டால் கால்நடைகளும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளன.
உதாராணமாக மாடுகள். மனிதர்களின் வாழ்வில்
மாடுகளின் பங்களிப்பு மிக முக்கியமானது. வயற்காட்டில்
ஏர் உழ, நீர் இறைக்க, வண்டியை இழுக்க எனப் பலவிதங்களிலும் உழைப்பதோடு விளைச்சலுக்குத்
தேவையான எருவினையும், உண்ண உணவினையும் (பாலாக) மாடுகள் வழங்குகின்றன. ஒவ்வொரு உயிரும்
பிறவற்றைச் சார்ந்தே வாழ்கிறது என்பதை ஆன்மீக ரீதியாகவே உணர முடியும். வெறும் அறிவியல் ரீதியாக
மட்டுமே பார்த்தால் அது நம்மை அழிவினை நோக்கியே
இட்டுச் செல்லும்.
'பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்' என மனிதனை மட்டும் உயிராகப் பார்க்காமல் எல்லாவற்றையும் நம்மோடு அரவணைத்துக் கொள்வதே.... ஆன்மீகப் பார்வை.
மனிதனைச் சுற்றியுள்ள மரம், செடி, கொடிகளும், கால்நடைகளும், பறவைகளும் என அனைத்தும் நலமாய் வாழ்வதற்குரிய சூழல் இந்தப் பூமியில் இருக்க வேண்டும்.
இவை ஒவ்வொன்றின் நலவாழ்வும் மற்ற உயிரினங்களின்
வாழ்வில் பின்னிப் பிணைந்தவை என்பது விஞ்ஞான ரீதியாகவும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு இயற்கை விவசாயம் என்பது அடிப்படை ஆதாரமாக உள்ளது.
பூமியில் பல நுண்ணுயிர்கள் புழு, பூச்சிகள் இருப்பதால் தான், நிலம்
வளமாகி விளைச்சல் பெருகுகிறது.
இரசாயன உரங்கள் பூச்சிக்கொல்லிகள் இடப்படும்
நிலங்களில் மண்புழுக்கள் இருப்பதற்கு வாய்ப்பே இல்லை!
மண்புழு உழவனின் நண்பன் எனத் தெரிந்திருந்தும், இரசாயன நஞ்சுகளை நிலங்களில் விதைத்து நண்பர்களையே கொல்லும் அறிவீனத்தைச் செய்தோம். அதற்கெல்லாம் விளைவாகத்தான் இன்று பெயர் தெரியாத பல விநோத
நோய்களுக்கு மனித இனம் ஆளாகி வருகிறது!!!