இந்தியா
ஆசியாவின் தென்பகுதியில் அமைந்துள்ள இந்தியா 32 லட்சத்து 82 ஆயிரம் ச.கி.மீ பரப்பளவில் காணப்படுகிறது. இங்குச் சுமார் 126 கோடி மக்கள் வாழ்கின்றனர். உலக வங்கியின் அறிக்கையின்படி, `2013-ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் உள்ள 60.5 சதவிகித நிலம் விவசாயத்துக்காகப் பயன்படுத்தப்படுகிறது.
மேலும், 50 சதவிகித மக்கள் விவசாய நடவடிக்கை தொடர்பான வேலைகளில் ஈடுபடுகிறார்கள்' எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்திய மக்களில் 70 சதவிகித கிராமப்புற மக்கள் விவசாயத்தையே தனது வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர். இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 16 முதல் 18 சதவிகிதம் வரை விவசாயத்தின் மூலமாகப் பூர்த்தி செய்யப்படுகிறது.
2013-14 -ம் ஆண்டில் 3.7 சதவிகிதம் வளர்ச்சி கண்ட விவசாயம் 2016-17-ம் ஆண்டு முதல் சற்று சரியத் தொடங்கியுள்ளது. இந்தியா உற்பத்தி செய்யும் வேளாண் பொருள்களில் 85 சதவிகிதம் பொருள்கள் உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்கின்றன.
மீதமுள்ள பொருள்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்தியா அரிசி, பருப்பு, கோதுமை, பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகமாக உற்பத்தி செய்கிறது. மேலும், வெங்காயம், தக்காளி ஆகியவற்றை ஏற்றுமதி செய்வதில் பணக்கார நாடாகத் திகழ்கிறது.
இந்தியா தன் மொத்த உற்பத்தி வருமானத்தில் 24 லட்சம் கோடி ரூபாயை விவசாயத்தின் மூலம் ஈட்டுகிறது.