ராஜாவும், ரம்யாவும்

ராஜாவும், ரம்யாவும் ஒருத்தரையொருத்தர் புரிந்து கொண்ட அன்பான தம்பதி தான்.

ஆனால், மாமியார் கூட இருக்கிறது மட்டும் சுத்தமா ரம்யாவுக்கு பிடிக்கிறதே இல்லை. அவங்கள முதியோர் இல்லத்துல கொண்டு போய் விட சொல்லி அடிக்கடி சண்டை போடுவா ராஜா கூட, அவனும் சமாளித்துக்கொண்டே வந்தான். இன்னைக்கு முடிவாவே சொல்லீட்டா,

"ஒண்ணு நான் இந்த வீட்ல இருக்கணும், இல்ல உங்க அம்மா இருக்கணும்,
நீங்களே முடிவு பண்ணிக்கோங்கன்னா"

ரம்யா பிடிவாதக்காரி, இனி அவ கூட பேசி ப்ரயோஜனமில்லை என்பதை உணர்ந்தான் ராஜா. வேறு வழியின்றி அவள் முடிவிற்கு ஒத்துக்கொண்டான்.

"ரம்யா நீ எனக்கு ஒரு உதவி பண்ணணும் என்றான்"

பொறுமையாவே கேட்டா "நான் என்ன பண்ணணும் சொல்லுங்க"

என்னை பள்ளிக்கூடத்துல  சேர்த்தது முதல்... உன்னை எனக்கு கல்யாணம் பண்ணி வெச்சது வரை,

எனக்கு எதுவெல்லாம் பிடிக்குமோ அதையெல்லாம் எனக்காக பாத்து பாத்து பண்ணினவங்க என்னோட அம்மா. அதனால எல்லா வசதியும் உள்ள ஒரு நல்ல முதியோர் இல்லமா பாத்து கொண்டு போய் விட வேண்டியது என்னோட கடமை. நான் இருக்கிற பிஸ்சியில என்னால அத பாத்து பண்ண முடியாதுங்றது உனக்கே தெரியும். அதனால எனக்காக நீ தான் இந்த உதவிய பண்ணிக்குடுக்கணும் என்றான்."

அதற்கு முழுமனதோடு ஒத்துக்கொண்டாள் ரம்யா...

நீ இன்னொரு உதவி கூட எனக்காக பண்ணணும் ரம்யா என சொல்லி தொடர்ந்தான் ராஜா...

அப்பா இல்லாம என்னை வளர்த்ததாலயோ என்னமோ, என்னோட அம்மாவுக்கு என்னைத் தவிர வேற உலகம் தெரியாது. என்னையே நம்பி இருந்ததால வெளி உலகம் தெரியாத வெள்ளந்தியாவே இருந்திட்டாங்க. நீ செலட் பண்ணுற முதியோர் இல்லத்துல எப்படி நடந்துக்கணும், யாரெல்லாம் நல்லவங்க, இத மட்டும் கொஞ்சம் விசாரிச்சு, நீ பாத்து பழகிட்டு வரணும், அப்றமா நாம அம்மாவ அங்க கொண்டு போய் சேத்திடலாம், அதுக்கப்புறம் அவங்க அங்க எந்த பிரச்சனையும் இல்லாம இருப்பாங்க இல்ல... என்றவன் மேலும்,

முதியோர் இல்லத்துல உள்ளவங்கள பத்தி முழுசா தெரிஞ்சு வர, நீ தொடர்ந்து ஒரு வாரம் தினமும் குறஞ்ச பட்சம் ஒருமணிநேரமாவது அங்க உள்ளவங்க கூட செலவு பண்ணணும் என்றான்...

ஓ தாராளமாங்க, என மலர்ந்த முகத்தோடு ஒத்துக்கொண்டாள் ரம்யா... நாம முதியோர் இல்லத்தில அம்மாவ கொண்டுவிட போறது இப்போதைக்கு அம்மாவுக்கு தெரிய வேண்டாம் என்றான் ராஜா... அதுவே தான் ரம்யாவுக்கும் சரியெனப்பட்டது...

ரொம்ப ஆர்வமா தேட துவங்கினா முதியோர் இல்லங்களை... அடுத்த நாளே ஏசி ரூம் வசதியுள்ள முதியோர் இல்லத்த கண்டுபிடிச்சு வந்தா ரம்யா... அதனோட அருமை பெருமையெல்லாம் வேலை முடிச்சு வீட்டுக்கு வந்த ராஜா கிட்ட சொல்லி சிலாகித்துக் கொண்டாள். அமைதியாக கேட்டுக்கொண்டான் ராஜா...

அடுத்த நாள் முதியோர் இல்லம் போய் வந்த ரம்யா அங்க உள்ள பெரியவங்கள பத்தியெல்லாம் சொன்னா... அவளை அங்க உள்ள எல்லாருக்கும் ரொம்ப பிடிச்சு போனதா பெருமையோடே சொன்னா... அதையும் அமைதியாக கேட்டுக்கொண்டான் ராஜா...

அடுத்த நாள் முதியோர் இல்லம் போய் வந்ததாக சொன்னாள் ரம்யா... அங்கே நடந்த சம்பவங்கள் எதையும் அவனுக்கு அவள் அன்றைக்கு சொல்லவில்லை... அவனும் அதை பற்றி எதுவும் கேட்கவில்லை... அமைதியாவே இருந்தான்...

அடுத்தடுத்த நாட்களிலும் அவள் எதுவும் சொல்லவில்லை... அவள் போய் வருவதை மட்டும் உறுதி செய்து கொண்டான் ராஜா...

அவன் சொல்லியிருந்த நாட்கள் முடிந்தது. இன்றைக்கு தான் அம்மாவை முதியோர் இல்லம் கொண்டுவிட வேண்டிய நாள் அவன் ப்ரஷ்ஷாகவே இருந்தான். அவளிடம் சிறிது பதட்டம் தெரிந்தது. ராஜா ரம்யாவை அழைத்தான் "வா நான் அம்மா கிட்ட சொல்றேன் அவங்கள கொண்டு போய் முதியோர் இல்லத்தில விட்டு வரலாம் என"

கையை பிசைந்த படி வந்த ரம்யா அவன் கையை பிடித்துக்கொண்டு சொன்னாள் "வேண்டாங்க அவங்களும் நம்ம கூடயே இருந்துடட்டும், தனிமையா இருக்கும் பெரியவங்க ரொம்ப பாவங்க"

என்று சொன்னவள் மேலும் தொடர்ந்தாள்... இப்போ நீங்க எனக்கொரு உதவி பண்ணணும் "நாம வாரா வரம் சினிமாவுக்கு போற நேரத்துக்கு பதிலா அந்த முதியோர் இல்லம் போய் வரலாமாங்க? அங்க இருக்குறவங்களுக்கு காசு, பணம் எதும் தேவையில்லேங்க அன்பா, அக்கரையா பேசுற நாலு பேர் தாங்க வேணும்" எனக்கேட்டு அவனை பரிதாபமாக பார்த்தாள்.

அவன் சம்மதம் அன்பு முத்தத்தோடே அவளுக்கு கிடைத்தது. இப்போது அவன் அணைப்பிற்குள் இருந்த அவளிடம் திரும்ப அவன் கேட்டான்

"அம்மாவின் மாற்றமுடியா குறை சொல்லும் பழக்கத்த நீ எப்படி சமாளிக்க போகிறாய் என"

அதற்கு அவள் "காது கேட்காதது போல இருந்துட்டு போறேங்க,
கொஞ்ச நாள்ள அவங்களே மாறிடுவாங்க என நம்பிக்கையோடே சொன்னாள்..."

RECENT POST

தேங்காய் நீரில் இத்தனை நன்மைகளா?

ஒரு கோப்பை தேங்காய் நீரில் இத்தனை நன்மைகளா?????? ✳ தேங்காய் நீரில் கலோரிகள் மிகக்குறைவு. இதனை அருந்துவதால் உடல் புத்துணர்ச்சி அட...