முதல் மாதம்

கருத்தரித்தல்: 

மாதவிலக்கு வந்த நாளில் இருந்து முதல் மாதம் தொடங்குகிறது. பொதுவாக 15, 16-வது நாளில் பெண்ணின் சினைப்பையில் இருந்து முட்டை வெளிப்படும். ஃபெலோபியன் குழாய் வழியே முட்டை பயணிக்கும்போது, ஆணின் விந்தணுவுடன் சேரும்போது, கருத்தரித்தல் நடக்கிறது.

முதல் மாதத்தின் இறுதியில், மிகமிகச் சிறு அளவில் கரு வளர்ச்சியடைந்துவிடும். சினைக் குழாய் (ஃபெலோபியன்) வழியே பயணித்து, கருப்பையை அடையும்.

கருப்பைக்குள் நுழைந்ததும், இந்தக் கரு இரண்டாகப் பிரியும். ஒன்று 'எம்ப்ரியோ' (embryo) எனப்படும் சிசு. மற்றொன்று, நஞ்சுக்கொடி. 

இது, குழந்தைக்கும் தாய்க்குமான இணைப்பாக பிரசவம் வரை இருக்கும். எம்ப்ரியோவின் படிவங்கள்தான் குழந்தையின் உறுப்புகளாக வளர ஆரம்பிக்கும்...

கர்ப்பிணியின் உடலில் ஏற்படக்கூடிய மாற்றங்கள்: 

மாதவிலக்கு வருவது தவறி இருக்கும். அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்படும். கருவானது கர்ப்பப்பையில் தங்கும்போது, ரத்தக் கசிவு ஏற்படலாம். வயிற்றில் ஒருவித அழுத்தம் உணரப்படும். அதற்காகப் பயப்படத் தேவை இல்லை. மார்பகம் சற்று மென்மையானது போலவும், பெரிதானது போலவும் தோன்றும். சோர்வு ஏற்படும். குமட்டல், வாந்தி வரலாம்.


செய்ய வேண்டியவை: 


முதலில், கர்ப்பம்தானா என்பதை வீட்டிலேயே எளிய பரிசோதனை மூலம் உறுதிப்படுத்தலாம். இதற்கான 'டெஸ்ட் கிட்' மருந்துக்கடைகளில் கிடைக்கும். 

கர்ப்பத்தை உறுதிசெய்யும் சோதனை முறையும் அதிலேயே தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கும். கர்ப்பம் உறுதியானதும் உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது மகப்பேறு மருத்துவரை அணுகி, ஆலோசனை பெறவேண்டும்.

ஸ்கேன், ரத்தப் பரிசோதனைகள் செய்யப்படும். இதில் ரத்தத்தில் சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை, தைராய்டு, ஆர்.எச். ஃபேக்டர், ரத்த வகை, இரும்புச் சத்து குறைபாடு மற்றும் ருபெல்லா கிருமித் தொற்றுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி போன்றவை கண்டறியப்படும்.

சிறுநீரகப் பரிசோதனை மூலம் சிறுநீர்ப் பாதை நோய்த் தொற்று ஏதேனும் உள்ளதா என்பதைக் கண்டறிந்து, சிகிச்சைகள் அளிக்கப்படும்.

இதய நோய், தைராய்டு பிரச்னை போன்று வேறு உடல்நலக் குறைபாடு காரணமாக மாத்திரை மருந்துகள் ஏதேனும் எடுப்பவராக இருந்தால், மருத்துவரின் ஆலோசனை பெற்று, அவற்றைத் தொடரலாம்.

தலைவலி, வாந்தி, மயக்கம் போன்ற எந்தப் பிரச்னைகளுக்கும் சுய மருத்துவம் செய்துகொள்ளக் கூடாது.

மருத்துவரிடம் ஆலோசனை பெற்று, ஃபோலிக் அமிலம், மல்டி வைட்டமின் மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

சத்தான உணவுகளை நன்றாகச் சாப்பிட வேண்டும். இது, வயிற்றில் வளரும் கருவுக்குத் தேவையான வைட்டமின் மற்றும் தாது உப்புகளை இயற்கையான முறையில் அளிக்கும்.

கருத்தரித்த சில வாரங்களில் இருந்து சில மாதங்கள் வரை குமட்டல் நீடிக்கும். பெரும்பாலான பெண்களுக்கு இந்தப் பிரச்னை மூன்றாவது மாதத்திலேயே நின்றுவிடும். சிலருக்கு கர்ப்பக் காலம் முழுவதுமே லேசான குமட்டல் இருக்கலாம்.

வெறும் வயிற்றில் இருப்பதும் குமட்டலை அதிகரிக்கச் செய்யும். காலையில் ஏதேனும் கொஞ்சமாகச் சாப்பிட வேண்டும்.

குறிப்பிட்ட நேர இடைவெளியில் உணவைக் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.


RECENT POST

தேங்காய் நீரில் இத்தனை நன்மைகளா?

ஒரு கோப்பை தேங்காய் நீரில் இத்தனை நன்மைகளா?????? ✳ தேங்காய் நீரில் கலோரிகள் மிகக்குறைவு. இதனை அருந்துவதால் உடல் புத்துணர்ச்சி அட...