சீதளாதேவி மகாமாரியம்மன்
வலங்கைமான்
இக்கோயிலின் மூலவராக மாரியம்மன் உள்ளார்.
அவர் சீதளாதேவி அம்மன் என்றும் பாடை கட்டி மாரியம்மன் என்றும் அழைக்கப்படுகிறார்.
மகாமாரியம்மன் உருவில் சிறியவள்: எளிமையானவள்.
ஆனால் தன்னை நாடி வருபவர்களுக்கு அருள்புரிவதில் அவளை விட பெரியவர் எவரும் இல்லை என்ற நம்பிக்கையை பக்தர்களிடம் விதைத்திருப்பவள்.
குழந்தையே இந்த தலத்தில் மாரியம்மனாக வீற்றிருப்பதாக தல புராணம் தெரிவிக்கிறது
இத்தலத்தின் உள் சுற்றுப்பிரகாரத்தில் விநாயகர் இருளன், பேச்சாயி, பொம்மி மற்றும் வெள்ளையம்மாள் உடனுறை மதுரை வீரன் சுவாமி சன்னதிகள் அமைந்துள்ளன.
வாய் பேச முடியாத குழந்தைகளை இந்த தலத்துக்கு அழைத்து வந்து மாரியம்மனுக்கும் பேச்சாயி அம்மனுக்கும் தனித்தனியாக சர்க்கரை பொங்கலிட்டு படைத்து வழிபட்டால் பேச்சு வரும் என்பது நம்பிக்கை.
உடலில் எந்த பகுதியில் நோய் தாக்கம் இருப்பினும், அம்மனை வேண்டிக்கொண்டு அங்கபிரதடசணம் வருவது இந்த தலத்தில் தினமும் நிகழும் நிகழ்வுகளில் ஒன்றாக இருக்கிறது.
அம்மை நோய் கண்டவர்கள் இந்த தலத்திற்கு வந்து மூன்று நாட்கள் தங்கியிருந்து மாரியம்மனின் அபிஷேக பாலையும், வேப்பிலையையும் உண்டு வந்தால் அம்மை நோய் தாக்கம் குறைந்து உடனே குணமாகி விடும்.
கண் நோய் மற்றும் கண்ணில் குறைபாடு உள்ளவர்கள் அம்மனுக்கு அர்ச்சனை செய்து ஏழு நாட்கள் கோவிலில் தங்கி இருந்து அம்மனின் அபிஷேக பாலையும், வேப்பிலையையும் உண்டு வந்தால் கண் பார்வையில் கண்டிப்பாக முன்னேற்றம் காணப்படும்,
கண் நோய் குணமானவர்கள் வெள்ளியில் கண் மலர் வாங்கி அம்மனுக்கு சமர்ப்பிக்கலாம்.
கால் நோய் மற்றும் வாத நோய்களுக்கு கோவிலில் தரும் எலுமிச்சையின் சாறு, வேப்பிலை, குங்குமம் மூன்றையும் குழைத்து தடவி வந்தால் நோய் விரைவில் குணமடையும்.
தல வரலாறு:
வலங்கைமான் வரதராஜன்பேட்டை தெருவில் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னர் காதக் கவுண்டர் என்பவர் வசித்து வந்தார். அவர் மனைவி பெயர் கோவிந்தம்மாள். இருவரும் இறைபக்தி மிக்கவர்கள். காதக் கவுண்டர் விவசாய வேலை செய்து வந்தார். அவர் மனைவி பக்கத்துக் கிராமங்களுக்குச் சென்று தின்பண்டங்கள் விற்கும் அங்காடி வியாபாரம் செய்து வந்தார். வியாபாரத்திற்காகப் புங்கஞ்சேரிக்கு கோவிந்தம்மாள் சென்றிருந்தார். அன்று வெள்ளிக்கிழமை, நல்ல வியாபாரம் நடந்தது நெல்லும், காசும், நிறையக் கிடைத்தன. எல்லாம் இறையருள் என்றெண்ணிக்கொண்டு மகிழ்ச்சியாக, அங்குள்ள ஒரு குளத்திற்கு குளிக்கச் சென்றார்.
அப்போது, ஒரு பிராமணரும் அவரது மனைவியும் குழந்தையுடன் அங்கிருந்த அடைக்கலங்காத்த அய்யனார்கோயில் பக்கம் போவதைப் பார்த்தார். குளித்துவிட்டுக் கரையேறிய பின் அய்யனார்கோயில் பக்கமிருந்து குழந்தை அழும் குரலைக் கேட்டார் கோவிந்தம்மாள். அங்கே விரைந்து சென்ற கோவிந்தம்மாள், பெண் குழந்தை ஒன்று அங்கே அழுது கொண்டு இருப்பதைக் கண்டாள். தெருக்காரர்கள் ஓடி வந்தனர், குழந்தையைக் கொண்டு வந்து விட்டவர்களைத் தேடிப் பார்த்தனர். அங்கு யாரும் தென்படவில்லை. அழுது கொண்டிருந்த அந்தக் குழந்தையைக் கோவிந்தம்மாள் தூக்கினாள். குழந்தை அழுவதை மறந்து அழகாகச் சிரித்தது.
அந்தக் குழந்தையின் அழகில் மயங்கிய அத்தெருவாசிகள் அனைவரும் அக்குழந்தையைத் தாமே வளர்க்க வேண்டுமென்று போட்டியிட்டனர். கடைசியாக அந்தக் தெரு நாட்டாண்மைக்காரர் வளர்ப்பார் என்ற முடிவுக்கு வந்தனர். தனக்கு குழந்தை கிடைக்கவில்லையே என்று கோவிந்தம்மாளுக்கு வருத்தம். புங்கஞ் சேரியில் கோழிகளும், ஆடு, மாடுகளும் திடீரென இறக்கத் தொடங்கின பலருக்கு அம்மை நோய் தாக்கியது. அய்யனார் கோயிலில் கிடைக்கப் பெற்ற அந்தப் பெண் குழந்தைக்கும் அம்மை வார்த்து விட்டது, ஊரே பெரும் துயரம் அடைந்தது. இந்நிலையில் ஒருவர் ஆவேசம் வந்து, அந்தப் பெண் குழந்தையைக் கோவிந்தம்மாளிடம் கொடுத்துவிட வேண்டும். அப்போதுதான் இந்த ஊர் நலம் பெறும் என்று கூறினார்.
ஊடனே கோவிந்தம்மாளை அழைத்து அக்குழந்தையைக் கொடுத்துவிட்டனர். குழந்தையை எடுத்து வந்து சீதளா எனப் பெயரிட்டுக் கோவிந்தம்மாள் வளர்க்கத் தொடங்கினாள். ஆனால் கடுமையான அம்மையால் மூன்றாம் நாள் அக்குழந்தையின் உயிர் பிரிந்து விட்டது. ஆறாத்துயரம் அடைந்த கோவிந்தம்மாளும் அவர் கணவரும், குழந்தையின் உடலுக்கு இறுதிச் சடங்குகளைச் செய்து தம் வீட்டு கொல்லையில் அடக்கம் செய்து விட்டனர்.
சிலர் அக்குழந்தை ஏழரை ஆண்டுகள் கோவிந்தம்மாள் வீட்டில் வளர்ந்து பல அற்புதங்களைச் செய்து, பின்னரே இறந்ததாகவும் கூறுகிறார்கள்.
பின்னர், குடமுருட்டி ஆற்றில் நீராடிவிட்டு வருவோரில் சிலர், கோவிந்தம்மாள் வீட்டுக் கொல்லைப்புறம் வந்த போது ஆவேசமாக வந்து ஆடினர். அவர்கள் நான்தான் மாரியம்மன் குழந்தை வடிவில் இங்கு வந்தேன். என்னை வழிபடுவோருக்கு அருள் புரிவேன் என்று கூறினார். அன்தபடி குழந்தையைச் சமாதி செய்த இடத்தில் கீற்று கொட்டகை போடப்பட்டது
மக்கள் வந்து வழிபடத் தொடங்கினர் பின்னர் அவ்விடத்தில் கோயிலும் எழுப்பப் பெற்றது சீதளாதேவி மகாமாரியம்மன் கோயிலாகப் பெயர் பூண்டு வரந்தரும் தெய்வமாக அன்னை பராசக்தி அங்கே விளங்கலானாள். அதுவே வலங்கைமான் மாரியம்மன் கோயில் தோன்றி வளர்ந்த வரலாராக கூறப்படுகிறது.
மகா மாரியம்மன்:
நான்கு கரங்களுடன், வலது காலை மடித்து வைத்தபடி வீர சிம்மாசன்த்தில் மகா மாரியம்மன் வீற்றிருக்கிறார். வலது மேற்கரத்தில் உடுக்கையும், வலது கீழ்கரத்தில் கத்தியுமும், இடது மேற்க ரத்தில் சூலமும், இடது கீழ்க ரத்தில் கபாலமும் வைத்திருக்கிறார். அம்மனின் இரு தோள்களிலும் இரு நாகங்கள் உள்ளன.
இந்த தல மாரியம்மனை தீபமேற்றி வழிபட்டு, அர்ச்சித்தால் நாகதோஷங்கள் அகலும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
தலச்சிறப்பு:
மருத்துவர்களால் கைவிடப்பட்ட நோயாளிகள் இந்த அம்பாளை வேண்டிக்கொள்வர். நோய் குணமானவுடன், 'பாடைகாவடி' எடுத்து பிரார்த்தனையை நிறைவேற்றுவர். பக்தர்கள், "தன் உடல் நலமடைந்தால் உற்சவ காலத்தில் பாடை மீது படுத்து ஆலயத்தை வலம் வருவதாக வேண்டிக் கொள்வர்".
பங்குனி மாதம் நடைபெறும் உற்சவத்தின் போது ஆயிரக்கணக்கான பாடை வழிபாடுகள் நடைபெறும். உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் பாடை மீது படுக்க, கயிறால் கட்டுவர். பிறகு சுமந்து வருவர். கொள்ளிச் சட்டி எடுக்க வேண்டிய முறை உள்ளவர் அதனை எடுத்துக் கொண்டு முன்னால் வருவார். இவர்கள் ஆலயத்தை வலம் வந்ததும் பாடை பிரிக்கப்படும். பிரித்ததும் மஞ்சள் நீரைத் தெளிக்க, படுக்கும் போது மயக்கமுற்றவர் தெளிந்தெழுவார். வேண்டுதல் நிறைவேற்றப்பட்டதும் மகிழ்ச்சியுடன் வீடு திரும்புவார்கள். இப்படிப்பட்ட பாடைக் காவடி வழிபாடுகளை ஏற்பதுதான் இந்த மாரியம்மனுக்குச் சிறப்பாகும்.
போலீசாரின் மண்டகப்படி
வலங்கைமான் காவல் நிலையத்தில 1942-ம் ஆண்டு ஒரு போலீஸ் அதிகாரி பொறுப்பேற்றார். அந்த சமயத்தில் பங்குனித் திருவிழா நடைபெற்று வந்தது. திருவிழாவின் போது பாடைக் காவடி மற்றும் அலகு பாவடி போன்றவை எடுக்கக் கூடாது என்று அந்த போலீஸ் அதிகாரி தடை விதித்தர். அந்த வருடம் பாடைக்காவடி எடுத்து வந்த பக்தர்களை வாய்க்கு வந்தபடி திட்டியாதோடு, தன் கைப்பிரம்பால் அவர்களை விரட்டியடித்தார்.
பக்தர்களுக்கு ஏற்பட்ட துன்பத்தை கண்டு துடிக்காமல் இருப்பவர் தாயல்லவே! சிறிது நேரத்தில் அந்த போலீஸ் அதிகாரியின் கண் பார்வை திடீரென்று பறிபோனது. ‘கண்தெரிய வில்லையே! என்று கதறிய அந்த அதிகாரி அம்மை நோயாலும் பாதிக்கப்பட்டார். அகிலத்தை காக்கும் அம்மனின் பக்தர்களை துர்வார்த்தைகளால் தூற்றியதால். அம்மனின் கோபத்திற்கு கிடைத்த சாபம் இதுவென்று அப்போது தான் போலீஸ் அதிகாரிக்கு தெரியவந்தது.
அவர் உடனடியாக ஒரு பேப்பரையும், பேனா வையும் அங்கிருந்த ஒருவரிடம் வாங்கி, இனி மேல் எந்த அதிகாரியும் என்போல் பாடைக் காவடி விழாவுக்கும், இறை காரியத்திற்கும் தடையாக இருக்காதீர்கள் என்று எழுதி கையெழுத்திட்டார். சற்று நேரத்தில் அவர் உயிர் பிரிந்தது. அன்று முதல் வலங்கைமான் போலீஸ் நிலையத்தில் இருந்து பங்குனி மாத திருவிழாவின் போது ஒரு நாள் மண்டகப்படி இன்றளவும், பயபக்தியுடன் அம்மனுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
திருவிழாக்கள்:
ஆவணி, பங்குனி ஆகிய இரு மாதங்களிலும் மாரியம்மனுக்கு திருவிழா நடைபெறுகின்றது.
ஒவ்வொரு ஆவணி ஞாயிற்றுக்கிழமையும் திருவிழா,
ஆவணி கடைசி ஞாயிறு தெப்பத்திருவிழா,
பங்குனி 2-ம் ஞாயிறு "பாடைகாவடி திருவிழா" சிறப்பானது,
பங்குனி மூன்றாவது ஞாயிறு "புஷ்பபல்லாக்கு",
பங்குனி "கடைஞாயிறுதிருவிழா".
பங்குனித்திருவிழா பங்குனி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையன்று தொடங்குகிறது. அன்று இரவு அம்பாளுக்கும் பூசாரிக்கும் காப்பு கட்டப்படுகிறது. காப்புக் கட்டிக் கொள்ளுதல் என்பது இவ்விழா முடியும் வரை தூய்மையாக இருந்து விழாவை புனிதமாக முடித்து வைப்பதற்காக எடுத்துக் கொள்ளும் உறுதிச் செயலாகும். காப்பு கட்டிய பின் விழா முடிந்து காப்பவிழ்க்கும் வரை அவ்வூர் மக்கள் வெளியூர் செல்லக்கூடாது என்பது மரபு. 8-ஆம் நாள் திருவிழாவைப் “பாடைக்காவடி திருவிழா” எனச் சிறப்பாக அழைப்பர்.
திருவிழா அன்று வலங்கைமான் மகா மாரியம்மன் கோவிலை சுற்றி நூற்று கணக்கான பாடைகள். பாடைகளில் பிணங்கள், பிணங்களுக்கு அடிக்கப்படும் மேளம், தீச்சட்டி என ஒரு பகல் நேரத்தில் வீதி முழுக்க பாடைகாவடிகள் வரும். பாடைகளில் படுத்திருப்போர் வாய்கட்டி உடலில் கயிறு கட்டி பாடைகாவடி எடுக்கும் பக்தர்களை பார்க்கும் போது அன்னையின் மேல் மக்களுக்கு இருக்கும் நம்பிக்கை எத்தகையது என்பது புரிந்தாலும் ஒரு உயர்ந்த தத்துவத்தையும் இந்த பாடைகட்டி திருவிழா போதிக்கிறது.
நாம் எப்படி தான் வாழ்ந்தாலும் கடைசியில் இதுதான்.
இவ்வளவுதான் வாழ்க்கை. இருக்கும் வரை எப்போதும் எல்லோரிடமும் அன்போடும் நல்ல மனதோடும் வாழ வேண்டும் என்ற எண்ணம் தோன்றும்.
பாடைக்காவடியுடன் ரதக்காவடிகள், அலகுக்காவடிகள், பக்க அலகுக்காவடிகள், பால் அலகுக்காவடிகள் காலை முதல் கோவிலுக்கு வந்த வண்ணம் இருக்கும் காட்சி பக்தர்களைப் பரவசப்படுத்தும். இவ்விழா அன்று மாலை செடில் சுற்றும் சிறப்பு நிகழ்ச்சியும் நடைபெறும். திருவிழாவின் மறுநாள் திங்கட்கிழமை மீன் திருவிழா என்ற விழா இப்பகுதியில் நடைப்பெறும். மீன் திருவிழாவில் அனைத்து ஊர்களிலிருந்து மீன்கள் முதல்நாள் இரவே வந்திருந்து மீன் சந்தையாக வியாபாரம் நடைப்பெறும்.
அன்று வலங்கைமான் பகுதி மக்கள் திருவிழாவை காண வெளியூரிலிருந்து வந்திருக்கும் தங்கள் உறவினர்களுக்கு மீன் விருந்து செய்வதை மீன் திருவிழா என வலங்கைமான் பகுதிகளில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
ஏப்ரல் மாதம் புஷ்ப பல்லக்கு விழாவும் ஞாயிற்றுக்கிழமை கடை ஞாயிறு திருவிழாவும் நடைபெறுகிறது. விழா தொடங்கிய நாள் முதல் இரவு பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. தினமும் அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
மனிதர்கள் மட்டுமல்லாது ஆடு. மாடுகளும் நோய்வாய்பட்டுவிட்டால் அன்னையை நினைத்து விபூதி பூசி வேண்டிக்கொண்டு அவைகள் நலமான பிறகு ஆடு மாடுகளை அன்னை சீதளாதேவிக்கு காணிக்கையாக செலுத்துகின்றனர்.
காலை 5.30 மணி முதல் பிற்பகல் 1.00 வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை திறந்திருக்கும்.
ஞாயிற்றுக்கிழமைகளில் பிற்பகல் நடைசாத்தப்படுவது இல்லை.
அமைவிடம்:
கும்பகோணத்தில் இருந்து 9km தூரத்தில் உள்ளது கோவில்.
கும்பகோணத்தில் இருந்து
மன்னார்குடி செல்லும் வழியில் வலங்கைமான் மெயின் சாலையில்
குடமுருட்டி ஆற்றை கடந்தவுடன் சாலை ஒரத்திலேயே அமைந்துள்ளது ஆலயம்..