வேதங்கள்...
இந்து மதத்தில், வேதம் என்ற சொல் "வித்" என்ற சமஸ்கிருதச்சொல்லை வேராகக் கொண்டது. வித் என்றால் சமஸ்கிருதத்தில் "அறிதல்" என்று பொருள். வேதங்கள் என்பதற்கு ’‘உயர்வான அறிவு’’ என்று பொருள் கொள்ளலாம்.
என்றைக்கும் நிரந்தரமாக இருக்கும் உண்மையான தத்துவத்தை அறியும்படியாகச் செய்யும் அறிவின் மூலமான இருப்பிடமே வேதமாகும்.
இந்து சமயத்துக்கு அடிப்படையானவை நான்கு வேதங்கள் ஆகும். ரிக், யஜூர், சாம, அதர்வண வேதம் ஆகியன. வேதங்களை "மறை" என தமிழில் கூறுவர்.
வேதங்களை எந்த மனிதருமே உருவாக்கவில்லை. வேதம் அநாதியானது.( தானே தோன்றியது) வேதங்களை ஈசுவரனும் உருவாக்கவில்லை; பரம்பொருளே வேத வடிவமாக இருக்கிறான். பிரம்மாவே வேத மந்திரங்களைக் கொண்டே படைப்புத் தொழிலைச் செய்கிறார்.
வேதத்தைச் "சுருதி" எனவும் கூறுவர். " கேட்கப்படுவது எதுவோ, அதுவே சுருதி". எழுதி வைத்துப் படிக்காமல், வாயால் சொல்லி, காதால் கேட்டே தலைமுறை தலைமுறையாக வந்ததால். வேதத்தைச் "சுருதி" என்பர். வேதம், சொல்வதை நுட்பமாக அறிந்துக் கொள்ள வேண்டும்; ஆழ்ந்து,சிந்தித்தால் மட்டுமே அதன் உயரிய கருத்து வெளிப்படும் விதமாக மறைப் பொருளாக கூறப்பட்டது என்பதால் , இதை " மறை" என்றனர்.
பிற்காலத்தில் சிந்து நதிக்கரையில் மாமுனிவர்களை ஒருங்கிணைத்து, வியாச முனிவர் வேதங்களைத் தொகுத்தார்.
வேதங்கள் நான்கு எனப் பிரித்து வகுத்தவரும் வியாசரே; எனவே இவரை
"வேதவியாசர்" என்பர்.
ரிக்_வேதம்.. " ரிக்" என்றால் "ஸ்தோத்திரம்" . பிற்காலத்தில் சுலோகம் எனச் சொல்லப்பட்ட செய்யுளுக்கே வேத காலத்தில் " ரிக்" எனப் பெயர்.
யஜுர்_வேதம்.. "யஜ்" என்றால் "வழிபடுவது " எனப் பொருள். யக்ஞம்( வேள்வி) தொடர்பாக வழிபாட்டு முறைகளை விவரிப்பதே யஜுர் வேதம். ரிக் வேதத்தில் உள்ள மந்திரங்களை வேள்வி என்ற யாகத்தில் பொருத்தி கொடுப்பதையே யஜுர் வேதம் செய்கிறது.
ஸாம_வேதம்.. ரிக் வேதத்தில் துதிகளாக இருக்கும் மந்திரங்களில் பலவற்றை கானமாக ஆக்கித் தருவதே ஸாம வேதம். ரிக் வேதத்தை ஸாம கானமாக நீட்டிப் பாட விதிகள் செய்யப்பட்டதே 'ஸாம வேதம்.'
"ஸாமம்" என்றால் மனதைச் சாந்தப்படுத்துவது, சந்தோஷப்படுத்துவது எனப் பொருள்படும்.
அதர்வணம்.. ( அதர்வ வேதம்)
அதர்வன்= புரோகிதர். அதர்வா என்ற ரிஷியின் மூலம் பிரகாசமடைந்தது அதர்வண வேதம். அதில் பலவிதமான ஆபத்துக்களைப் போக்கிக் கொள்ளவும், எதிரிகளை அழிப்பதற்கும் மந்திரங்கள் உள்ளன. உரைநடை போலவும், செய்யுள்களாகவும் மந்திரங்கள் இதில் இருக்கிறதாம்.
ஏனைய மூன்று வேதத்திலும் இல்லாத அநேக தேவதைகள், பலவிதமான கோரமான ஆவிகளைப் பற்றிய மந்திரங்களும் அதர்வணத்தில் உள்ளதாம். 'மாந்திரீகம்' ,என்று தற்போது சொல்லப்படுகிற பலவும் அதர்வண வேதத்தில் இருந்து வந்ததே. எனவே இதற்கு முக்கியத்தும் பலரும் அளிப்பதில்லை.
படைப்பின் விசித்திரம் இந்த வேதத்தில் சொல்லப்படுகிறது.
யாராலும் தோற்றுவிக்கப்படாமல், ஈஸ்வரனே மக்களின் நன்மைக்காக வேதங்களாக உருவெடுத்து அமைந்திருக்கிறான் என்பதே மகரிஷிகள் கூறுவதாகும்...