உயிரிலே கலந்தவள்

உயிரிலே கலந்தவள்

[இது சில உண்மைகளுடன் அழகிய புனைவும் கலந்து எழுதப்பட்டது ]

                    மனிதன் வேட்டையாடி உண்பதை கடந்து விளைவித்து உண்ண தொடங்கியதும் அவனது நிலம் அவனுக்கு ஒரு தலைவனை உருவாக்கி  தந்தது .நிலம் அவனுக்கு ஆளுமையை தந்தது .ஆளுமை ஒரு கட்டத்தில் அதிகாரமாய் உருவாக அங்கே இருந்து தான் யுத்தம் வேர் வைத்தது .போர் ஒரு தலைவனின் கெளரவ அடையாளம் .வீரம் அவன் வாழ்ந்த மண்ணின் அடையாளமாகிபோனது .

                    நிலம் தவிர்த்து ஒரு மன்னன் மட்டும் கடலையே ஆண்டு வந்தான் .இருபது தீவுகளின் சொந்தக்காரன்.அவனது தீவை கடக்க வரி கட்டியே ஆக வேண்டும் அனைத்து கப்பல்களும்.வணிகர்கள் கப்பல்களில் வந்து அந்த தீவுகளில் மிகப்பெரிய வர்த்தகம் நிகழ்த்தி வந்தார்கள் .ஆயுதங்கள்  முதல் தானியங்கள் வரை வணிகம் செய்ய முடிந்தது .நடு கடலில் கடற்கொள்ளையர்களிடம் இருந்து கப்பல்கள் பாதுகாப்பாக வந்து போக முடிந்தது .அவனது வீரம் தரணி அறிந்தது.

      
               மன்னன் பெயர் சந்திரவர்மன் .அவனுக்கு ஏழு மனைவிகள் .17 குழந்தைகள் .அவனுடைய ஆட்சியின் கீழ் மக்களால் அமைதியான வாழ்க்கை வாழ முடிந்தது .அவனுடைய இரண்டாவது மனைவி திலகவதி இரண்டாவது முறை ஒரு ஆண் குழந்தையை பெற்றேடுத்தாள்.அவனுக்கு சுதந்திரவர்மன் என்ற பெயர் சூட்டினர்.அரசகுலத்தில் அவன் தனித்தன்மையுடன் இருந்தான் .அவனிடம் அறிவும்,வீரமும் தேடி வந்தது .எல்லா பயிற்சியிலும் சிறப்பான தேர்ச்சி பெற்றான் .அவனையே மக்களும் விரும்பினர் .இளவரசன்  இளமைக்காலத்தில் இருந்தான் .

                    இளவரசனின் தோழன் இளம்பரிதியும்,மன்னனின் நான்காவது மனைவியின் மகன் கார்மேகம் இருவர் மட்டுமே எப்போதும் உடன் இருப்பார்கள் .இளவரசன் இரவு நேரங்களில் கடற்கரையில் அமர்ந்து கொண்டு நிலவை மட்டுமே ரசித்து கொண்டு இருப்பான் .அந்த சமயம்  அவன் யாருடனும் பேசுவது கிடையாது.அப்போது இளம்பரிதி"தோழரே இந்த நிலவு உங்களை அப்படி என்ன செய்து கவர்ந்துவிட்டது?தினமும் உங்களை அழைத்துவந்துவிடுகிறது."என்றதும் அவன் "தோழா நிலவு என்னிடம் தூது சொல்கிறது .நலம் விசாரிக்கிறது.எனது நலத்தை அறிந்து எங்கோ செய்தி அனுப்புவது போன்று தோன்றுகிறது .நிலவை  கண்ணாடியாக்கி என்னை எங்கோ இருந்து ஒரு பெண் கவனித்து கொண்டு இருப்பது போன்று தோன்றுகிறது ."என்றதும் இளம்பரிதி "இது என்ன மாதிரியான சிந்தனை தோழா ?எனக்கு இதில் உடன்பாடில்லை"என்றதும் இருவரும் கிளம்பும் போது நிலவு மேகத்திற்குள் மறைந்தது .

               நிலவு மீண்டும் வெளிவரும் போது மன்னனின் ஆட்சிக்குட்பட்ட எட்டாவது தீவில் ஒரு பெண் நிலவையே பார்த்து கொண்டு இருந்தாள் .நிலவோடு மெல்லிய தென்றலும் அவளது கூந்தல் தீண்ட அவள் புன்னகைத்தாள்.அவள் நிலவிடம்"அருமை தோழியே செய்தி சொன்னாயா?உன்னவள் உனக்காக காத்திருக்கிறேன் என்று .ஒரு சின்னஞ்சிறு வணிகரின் நான்காவது  மகளாக பிறந்துள்ளேன் என்று.என் பெயர் கார்த்திகை செல்வி என்றும் .தினமும் இரவு நிலவை தூது அனுப்புகிறேன் என்று"என்றதும் அவளுடைய உடன்பிறந்தவள் வந்து"தூது அனுப்பியாச்சா?தந்தை அழைக்கிறார்."என்றதும் கிளம்பி போனாள் .நிலவு அவளது மறுநாள் வருகைக்கு காத்திருந்தது .

                 சுதந்திரவர்மனுக்கும்  ,கார்த்திகை செல்விக்கும் இடையேயுள்ள  காதல் அத்தனை தீவுகளையும் கடந்து தென்றல் ,மழை,நிலவு வழியாக ஒரு பிணைப்பு  ஏற்பட்டிருந்தது.உருவமே இல்லாத ஒரு உணர்வில் பிணைக்கப்பட்டிருந்தனர்.சுதந்திரவர்மன் நல்ல ஓவியன் தான் ஆனால் அவளை வரைய முடியாமல் தவித்தான் .அவள் உருவமற்று கிடந்தாள் .சில நாட்கள் சென்று தூரிகையை வீசி எறிந்தான் .அவளுக்கு உருவம் இல்லை என்பதை உணர்ந்தான் .அவளும் அவனை மட்டுமே சிந்தித்து கொண்டு இருந்தாள் .அவன் தன்னை தேடி வருவான் என்றே உறுதியாக நம்பினாள்.

                 மன்னன் தனது வயோதீகத்தை அடைந்தான் .அரசனை தேர்ந்தெடுக்க வேண்டிய சமயம் .தனது  வாரிசுகளை சோதனைக்கு உட்படுத்தினான்.எல்லா தகுதியும் பெற்றவனே அடுத்த மன்னன் .இறுதியாய் தேர்வானது சுதந்திரவர்மன் .ஆறு மாத காலம் அவனை பக்கத்து நாட்டு மன்னன்    வாணடியானிடம் ஆலோசனை பெற அனுப்பி வைத்தான் .வாணடியானின் மகள் சுபத்ரா சுதந்திரவர்மனை நேசித்தாள்.அவளது உள்ளம் அறிந்த அவளது தந்தை சுதந்திரவர்மனிடம் பேச அவனோ மறுத்துவிட்டான்.அவளது பேரழகு அவனை ஈர்த்துவிடவில்லை.உடனே அங்கிருந்து கிளம்பினான் .அவன் வரும் வழியில் கப்பல் எட்டாவது தீவை கடக்கும் போது அவன் மீது மோதிய காற்று அவளையும் சென்றடைந்தது .கடற்கரை நோக்கி விளங்காத விடை தேடி ஓடி வந்தாள் .தூரத்தில் ஒரு கப்பல் புள்ளியாகி இருந்தது.அவனும் அந்த கடற்கரை வாயிலையே பார்த்து கொண்டு இருந்தான் .

                 சுதந்திரவர்மன் பதவி ஏற்பதற்கு ஏழு நாட்களுக்கு முன்பு மன்னனின் முதல் மனைவி கொடுத்த விருந்தில் கலந்து கொண்டான் .விருந்து முடிந்து திரும்பும் போது மன்னனின் முதல் மனைவியிடம் "மனமார்ந்த நன்றி தாயே .நீங்கள் எனக்களித்த இந்த உணவிற்கு நன்றி.அதோடு உணவில் நஞ்சு இருந்ததும் எனக்கு தெரியும் .நான் ஏழு தாய்களின் குழந்தை என்றே நினைத்தேன் .ஆனால் ஏதோ வஞ்சம் உங்களை ஆட்க்கொண்டுவிட்டது என்பதை உணர்கிறேன் .அண்ணனுக்கு மன்னர் பதவியை இந்த நஞ்சு பெற்று தருவது எப்படி நீதியாகும்?என் உயிர் பிரிந்தாலும் உங்களின் பெயர் சொல்ல மாட்டேன் "என்று புறப்பட்டான் .சுதந்திரவர்மன் தலை சிறந்த மருத்துவன்.எல்லா நஞ்சின் மணம்,குணம் அறிந்தவன்.

               சுதந்திரவர்மன் ஆறு தாய்களிடமும் நஞ்சையே உண்டான்.ஏழாவது நாள் தனது தாயிடம் சாப்பிட்டான்.மெதுவாய் தாயின் மடியில் படுத்தான் .தாய் அவனது தலை முடி கொதினாள்.அவளிடம் "தாயே நாளைய சூர்யோதயம் உங்களுக்கு நல்லபடியாய் அமைய வாய்ப்பில்லை .நான் வஞ்சகத்தால் வீழ்ந்துவிட்டேன்.நீங்கள் தைரியமாய் வாழ பழகுங்கள்"என்று உறங்கி போனான் .மகனின் வார்த்தைகள் ஏதோ செய்தது .மறுநாள் காலை சுதந்திரவர்மன் உடல் எங்கும் புண் ஏற்பட்டது .நிமிடத்திற்கு நிமிடம் அவனது உடல் அழுகி கொண்டு இருந்தது.எல்லா அரச வைத்தியர்களும் தோற்று போனார்கள் .

                 வாணடியானும்,சுபத்ராவும் அங்கே சிரித்து கொண்டு இருந்தனர் .தனது அரச வைத்தியனுக்கு பரிசை வாரி வழங்கினான்.குணப்படுத்த முடியாத நஞ்சை கண்டுபிடித்தவன் அவன் தான்.சுபத்ரா தனது தந்தையிடம் "சுதந்திரவர்மன் இன்னும் மரணத்தின் விளம்பிற்கு வர வேண்டும் .இறுதியாய் அவனிடம் என்னை ஏற்று கொள்ளும் மனநிலை வந்தால் மட்டுமே மாற்று மருந்து.இல்லையென்றால் மரணம் தான்"என்றாள் .சுதந்திரவர்மனுக்கு இது சுபத்ராவின் சூழ்ச்சி என்பது புரிந்தது .ஆனால் தன்னை வளர்த்த அன்னையர்களை பயன்படுத்தி வீழ்த்துவாள் என்று எண்ணவில்லை.அவனது அருகில் இளம்பரிதியும் ,கார்மேகமும் உடன் இருந்தனர் .அவர்களிடம் "நண்பா எனது மரணம் மிக அருகில் வந்துவிட்டது .இன்னும் பத்து நாட்களில் பார்வை இழந்துவிடுவேன்.இருபதாம் நாள் இறந்து விடுவேன் .இறுதியாய் எனக்குள் ஒரு ஆசை.எனக்காக ஒரு பெண் காத்திருக்கிறாளா?என்று அறிய வேண்டும் .எனது உணர்வுகள் உண்மையானாதா?என்று அறிய வேண்டும் .அவள் நீண்ட தொலைவில் இருப்பதாக தோன்றவில்லை .இருவரும் தேடி புறப்படுங்கள்"என்றதும் இருவரும் இருபது தீவுகளிலும் தேட கிளம்பினார்கள் .

               கார்த்திகை செல்வி தினமும் சாப்பிடும் போது ஏதோ ஒரு கசப்பு சுவையை உணர்ந்தாள் .நிலவு ஏதோ தீராத சுமையோடு இருப்பது போன்று உணர்ந்தாள் .எங்கோ அவளது புன்னகை கரைசேர்ந்துவிட்டது.விழிகள் தானாய் கண்ணீர் சுமந்து கொண்டு இருந்தது.அவளது இந்த நடவடிக்கைகள் அவளது பெற்றோர்க்கு கலக்கத்தை ஏற்படுத்தியது .கடற்கரையை விட்டு அகலாதிருந்தாள்.சுதந்திரவர்மன் அவனை கடற்கரையில் படுக்க வைக்க சொன்னான் .நிலவு வந்து நின்றது "நிலவே என்னவளிடம் போய் சொல்.உன்னை போல் நானும் தேய்ந்து போகிறேன் என்று .திரும்பாத திசைக்கு பயணம் ஆகிறேன் என்று .இறுதியாய் ஒரு நொடி பார்வைக்காக காத்திருக்கிறேன் என்று"கண்களை மூடினான்.அவள் கண் திறந்தாள் நிலவு தோன்றி இருந்தது.அதையே பார்த்து கொண்டு இருந்தாள் .

                 இளம்பரிதி ஒவ்வோரு தீவாக தேடி கொண்டு இருந்தான் .ஒரு நாள் சுபத்ராவின் ராஜவைத்தியன் கையில் மாற்று மருந்துடன் யாருக்கும் தெரியாமல் சுதந்திரவர்மனை குணப்படுத்த கிளம்பினான் .சுதந்திரவர்மனின் தீவில் இறங்கியதும் சுதந்திரவர்மனின் சகோதரர்கள் வைத்தியனை கொன்று கடலில் வீசினார்கள்.இளம்பரிதி  ஏழாம் நாளில் எட்டாவது தீவை அடைந்தான் .அங்கும் எந்த தகவலும் இல்லாமல் கப்பலுக்கு திரும்புகையில் ஒரு பெண் நிலவையே பார்வை விலகாமல் பார்த்து அழுது கொண்டு இருந்தாள் .அவளை பார்த்தவுடன் அவனால் உணர முடிந்தது .அவளிடம் எல்லாம் கூறி அவளுடைய பெற்றோரிடம் அனுமதிபெற்று அழைத்து சென்றான் .சுபத்ராவுக்கு தகவல் கிடைத்தது .தனது கப்பலில் படையோடு கிளம்பினாள் .அவர்களை கடலில் கொன்று விட ஆணையிட்டாள்.இன்னும் கொஞ்ச நேரத்தில் சுதந்திரவர்மனை நெருங்கிவிடலாம் என்ற போது சுபத்ராவின் படை இவர்களை தாக்கியது .இளம்பரிதி தலைசிறந்த வீரன் .அவனோடு கார்மேகமும் இருந்தான் .எதிரி படையினரை சிதறடைத்து கடலில் வீசினார்கள் .அப்போது கார்மேகம் படுகாயமடைந்து இறந்து போனான் .கோபத்தில் இளம்பரிதி சுபத்ரா தலையை துண்டாக்கினான்.சுபத்ரா தனது முடிவை தேடி கொண்டாள் .கப்பல் கரை ஒதுங்கியது .தோளில் கார்மேகத்தை சுமந்தபடி   கார்த்திகை செல்வியை சுதந்திரவர்மனிடம் அழைத்து வந்தான் .முகமே தெரிமாயல் அழுகி இருந்தது.கண்கள் மட்டும் திறந்தே இருந்தது.அவனை நெருங்கிசென்று அவனது கரங்களை பற்றியது இரு உடலுக்குள்ளும் ஒரு ஒளி உட்புகுந்தது.அவள் அவனை பார்த்து சிரித்தாள் .அவனும் சிரித்தான் .உண்மையான உணர்வு கடத்தல் அது.அவன் இழக்கும் சுயநினைவை கொஞ்சம் தாமதப்படுத்தினான்.இறுதியாய் அவள் முகத்தை தனக்குள் வரைந்து கொண்டு இருந்தான் .

                இளம்பரிதி தனது கையில் இருந்த சின்ன துணிப்பையை மருத்துவரிடம் கொடுத்து சுதந்திரவர்மனுக்கு கொடுக்க சொன்னான் .இந்த மருந்து சுபத்ரா தனது இடுப்பில் கட்டி இருந்தாள் .அதை தான் எடுத்து கொண்டு வந்தான் .

                 மருந்து விரைவில் சுதந்திரவர்மனை குணப்படுத்தியது.கார்த்திகை செல்வியை மணந்து நல்லாட்சி புரிந்தான். தளபதியாக இளம்பரிதி நியமிக்கப்பட்டார் .கார்மேகத்திற்கு கடாற்கரையில் மணி மண்டபம் அமைத்தனர் .

                               இரவுகளில் தம்பதிகள் இருவரும் நிலவோடு பேசி கொண்டார்கள் .கார்மேகத்தின் மரணம் உறவுகளுக்கு உண்மையை உணர்த்தியது .எல்லோரும் சுதந்திரவர்மனை அரசனாக்கி பார்த்தார்கள் .நிலவு அன்றும் பிரகாசமாகவே ஒளிர்ந்தது .சரித்திரத்தின் அடுத்த காதலர்களை தேடி புறப்பட்டது .

                        [முற்றும் ]

RECENT POST

தேங்காய் நீரில் இத்தனை நன்மைகளா?

ஒரு கோப்பை தேங்காய் நீரில் இத்தனை நன்மைகளா?????? ✳ தேங்காய் நீரில் கலோரிகள் மிகக்குறைவு. இதனை அருந்துவதால் உடல் புத்துணர்ச்சி அட...